பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.
சிறு வயதில் குடும்பத்தைக் கைவிட்ட தந்தை, விபத்தில் பறிபோன கால், வறுமை வாட்டியபோதும் தாயுடன் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமந்து உச்சம் தொட்டவர்தான் மாரியப்பன். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமம்தான் இவரது சொந்த ஊர். தங்கவேலு, சரோஜா தம்பதியின் மூத்த மகனான மாரியப்பன், 5 வயதில் பள்ளிக்கு நடந்து சென்றபோது பேருந்து விபத்தில் சிக்கி, வலது காலின் முழங்காலுக்கு கீழுள்ள பகுதி முற்றிலும் சேதமானது.
காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காத மாரியப்பன், விளையாட்டின் மீதான காதலால் முதலில் வாலிபால் விளையாடி வந்தார். மாரியப்பனின் திறமை பார்த்த உடற்கல்வி ஆசிரியர், உயரம் தாண்டுதலில் கவனம் செலுத்துமாறு ஊக்கப்படுத்தினார். படிப்பு, விளையாட்டு என ஒருபக்கம் இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக தினமும் காலையில் செய்தித்தாள்கள் போட்டும், விடுமுறை நாட்களில் கட்டுமானப் பணிக்குச் சென்றும் தாய்க்கு உதவியாக இருந்துள்ளார்.
பள்ளியளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்று அசத்தினார். 2013ஆம் ஆண்டு பயிற்சியாளர் சத்யநாராயணனை சந்தித்தார். பின்னர், அவரால் பட்டைத்தீட்டப்பட்ட மாரியப்பன், 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து, 2020இல் டோக்கியோ பாராலிம்பிக்கிலும் களமிறங்கினார் மாரியப்பன். ஆனால், போட்டியின்போது பெய்த மழை காரணமாக அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை. இருப்பினும், 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதைத்தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கிலும் ஜொலித்து, ஹாட்ரிக் பதக்கம் வெல்ல பல பயிற்சிகளை மேற்கொண்டார் மாரியப்பன். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறைவதுண்டோ என்பதற்கு ஏற்ப மீண்டும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மாரியப்பன். பாராலிம்பிக்கில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உயரம் தாண்டித் தாண்டி உச்சம் தொட்ட சேலத்து சிங்கத்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது.