குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வுக்கான ரிசல்ட், மதிப்பெண், தரவரிசை விவரம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது.

6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.

சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 காலிப்பணியிடங்களாக அதிகரித்தது.

பின்னர் மீண்டும் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த அக்.28ஆம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், தங்கள் சான்றிதழை கடந்த 9ம் தேதி முதல் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நேற்று முன் தினம் தனது எக்ஸ் தளம் பதிவில் வெளியிட்ட பதிவில், “தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர் நலவாரியத்தால் அறிவிக்கையின் பிற்சேர்க்கை II-ல் உள்ள படிவத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது ஓய்வூதிய கொடுப்பாணையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வர்கள் தங்களது பெயர், விடுவிக்கப்பட்ட நாள் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் முன்னாள் ராணுவத்தினர் என உரிமை கோரும் அனைத்து தேர்வர்களும் தாங்கள் அரசுப்பணியில் பணிபுரிவது தொடர்பான சுய உறுதிமொழி படிவத்தையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான இறுதி நாளிலிருந்து ஓராண்டுக்குள் முப்படையிலிருந்து விடுவிப்பு பெறவிருக்கும் தேர்வர்கள், அறிவிக்கையின் பிற்சேர்க்கை II-ல், உள்ள படிவத்தில் படைப்பிரிவின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆதரவற்ற விதவை என உரிமை கோரும் தேர்வர்கள், சான்றிதழை உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்கள் சான்றிதழில் தங்களது பெயர், கணவர் பெயர், கணவர் இறந்த நாள், தற்போதைய மாத வருமானம் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் சான்றிதழை, உரிய அலுவலரிடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இணையவழியில் பெறப்படாத சான்றிதழில் அலுவலக முத்திரை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் முறை: முதலில் https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும். அதில் முகப்பு பக்கத்தில் இடது புறத்தில் நீல நிறத்தில் தலைப்புகள் இடம்பெற்று இருக்கும். அதில் மூன்றாம் இடத்தில் One Time Registration and Dashboard என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஏற்கனவே பதிவு செய்தோர் உள் நுழைய (Registered User) என்பதை கிளிக் செய்து தேர்வர்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும். அதில் குரூப் 4 தேர்விற்கு எதிரில் சான்றிதழ் பதிவேற்றம் என்று இருக்கும் பட்டையை கிளிக் செய்து தயாராக வைத்திருக்கும் சான்றிதழ்களின் புகைப்படங்களை அந்ததந்த இடத்தில் பதிவேற்றம் செய்யவும். 

Readmore: சீமானை கழட்டிவிடும் தம்பிகள்!. கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகும் செயலாளர்கள்!. சேலத்தில் பரபரப்பு!