முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்து வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அரசு பொருட்காட்சி தொடங்குகிறது.
இந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைக்கின்றனர். பின்னர், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். இந்த கண்காட்சியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை, வருவாய், சமூக நலன், ஊரக வளர்ச்சி, செய்தி மக்கள் தொடர்பு துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 28 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
அதே போல், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 34 அரங்குகள் இடம் பெறுகின்றன. மேலும், வேளாண்மைத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது. இந்த கண்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.