சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (59) என்பவர் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு, 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்தப் பள்ளிக்கு மாற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் கூறியுள்ளனா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், பள்ளியில் புகாரளித்தனர். இதையடுத்து, அவா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கும் புகாரை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிகள், சக ஆசிரியா்களிடம் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, சேலம் டவுன் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கல்வித் துறை சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவிட்டுள்ளாா்.