தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆவடியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின், 17,427 வீட்டு மனை பட்டாக்களுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய துணை முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இத்திட்டம் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தங்களுடைய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்” என்று கூறினார்.

Readmore: சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ.10,792 டிக்கெட்டா..? ஜெட் வேகத்தில் எகிறிய விலை..!!