அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி 53% ஆக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024ஐ அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும். முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். தற்போது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதலாக செலவாகும். ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Readmore: இதுமட்டும் கட்சியில் நடக்கவே கூடாது!. கோபமடைந்து பேசிய விஜய்!. சூசகமாக கூறிய புஸ்ஸி ஆனந்த்!