நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது. அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றியதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் நடந்துவருகிறது.

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19-ம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

இந்தநிலையில், காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அக்டோபர் 6 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடித்து 07.10.2024 (திங்கட்கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ஆத்தூரில் ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன!. ஆட்சியர் தகவல்!