சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், பதிவு செய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் விலை குறைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜனவரி 4) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திரன், “அரசு ஒப்பந்தங்களான சாலை அமைத்தல், பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள், கலைஞர் வீடு கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை கல்குவாரிகள் விநியோகிக்கின்றனர்.
சமீபத்தில் அதன் விலை உயர்த்தப்பட்டதால், ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை களைய ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் நலன் கருதி, பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை இரு தரப்புக்கும் பாதிப்பின்றி உரிய விலையில் வழங்க கேட்டுக்கொண்டதால் விலையை குறைத்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில துணைத்தலைவர் கார்மேகம், “அமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து, சேலத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட அனைத்து ஜல்லி வகைகளின் விலை யூனிட்டுக்கு தலா ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும்” என தெரிவித்தார்.
Read More : அதிமுக ஆட்சியில் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த வழக்கு!. மேலும் 3 பேர் கைது!.