வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது புதிய பல வசதிகளையும் விதிகளையும் அறிமுகம் செய்கிறது. இது தவிர ஏற்கனவே உள்ள வழிமுறைகளில் சில மாற்றங்களையும் செய்து வருகிறது. அந்த வகையில், 2025 ஆண்டிலும் பல புதிய விதிகளும் வசதிகளும் அமலுக்கு வரவுள்ளன. அவற்றில் முக்கியமானவை இபிஎஃப் ஏடிஎம் கார்டுகள் (EPF ATM Card) மற்றும் இபிஎஃப்ஓ மொபைல் செயலி (EPFO App). EPFO அதன் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை அறிவித்துள்ளது. ஜூன் 2025 க்குள், EPFO அதன் மேம்பட்ட அமைப்பான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) விரைவில் ஏடிஎம் கார்டுகளைப் பெறுவார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்கள் இபிஎஃப் சேமிப்பு தொகையை விரைவாகவும் எளிதாகவும் எடுக்க முடியும். அவசரநிலைகள், திடீர் பண தேவைகள் அல்லது எதிர்பாராத செலவுகளுக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை திரும்பப் பெறுவது இனி எளிதாகிவிடும். இபிஎஃப் கணக்குகளுக்கான பிரத்யேக செயலி உருவாக்கப்படும். உறுப்பினர்களின் மாதாந்திர பங்களிப்புகள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் முந்தைய முதலாளிகளின் கடந்தகால பங்களிப்புகளை கண்காணிக்க இது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
PF ஏடிஎம் கார்டு பயன்படுத்தி எவ்வளவு பணம் எடுக்கலாம்? பிஎஃப் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி இபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வரம்பு 50% ஆக நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. எதிர்காலத்திற்கான நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் மொத்த இபிஎஃப் இருப்பில் (EPF Balance) 50% மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.