இந்தியாவில் கைத்தறி துறையானது தேசத்திற்கு அதிக வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை கொண்டு வருவதற்கான பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. கைத்தறி தொழிலை மேம்படுத்தவும் தரப்படுத்தவும், இந்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. “தமிழ்நாட்டில் 1200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இச்சங்கங்களை நம்பி உள்ளன. இந்தநிலையில், நெசவுத்தொழிலுக்கான எந்திரங்கள் வாங்க நெசவாளர்களுக்கு மத்திய அரசு மானியமாக 50 சதவீதமும், மாநில அரசு மானியமாக 25 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15-வது நிதிக்குழுவின் 2021-2022 முதல் 2025-2026 வரையுள்ள காலத்திற்கான விவரப்படி, பட்டு நெசவுத்தொழிலுக்கான எந்திரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன் பயனாளிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதன்படி, மினியேச்சர் ஏரி ஸ்பின்னிங் பிளாண்ட் அலகு ஒன்றுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் 5 எண்ணிக்கையும், மாற்றியமைக்கப்பட்ட பட்டு கைத்தறிகள், குழி தறி அலகு ஒன்றுக்கு ரூ.41 ஆயிரம் மதிப்பில் 1,600 எண்ணிக்கையும் வழங்கப்படுகிறது. கணினி உதவியுடன் கூடிய ஜவுளி வடிவமைப்பு அலகு ஒன்றுக்கு ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 130 எண்ணிக்கையும், லிப்டிங் அமைப்புடன் கூடிய 720 ஹீக்குகள் கொண்ட மின்னணு ஜக்கார்டு எந்திரம் அலகு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 585 எண்ணிக்கையும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜக்கார்டு, தார் சுற்றும் எந்திரம், நியுமேட்டிக் லிப்டிங் எந்திரம், பகுதி பாவு சுற்றும் எந்திரம், வைண்டிங் எந்திரம், டப் டையிங், ஆர்ம் டையிங் உள்பட பல்வேறு எந்திரங்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள ஆட்சியர் பிருந்தா தேவி, இது தொடர்பான விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்று கூறியுள்ளார்.

Readmore: சேலத்தில் ரூ. 3 லட்சத்துக்கு குழந்தையை விற்று பைக் வாங்கிய தம்பி!. மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை மிரட்டி பகீர் செயல்!.