ஓமலூரில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பை கழிவுகளால் சமாதிக்கு செல்ல பாதையின்றி பரிதவிக்கும் 12 வது வார்டு பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா..? பேரூராட்சி நிர்வாகம்..!
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த நேரு நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைந்துள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளின் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில், இடப்பற்றாக்குறை என கூறி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் குப்பைகளை கொட்டாமல் இதன் அருகில் உள்ள சரபங்கா ஆற்றின் நீர்வழிப் பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்லும் வழி முழுவதும் அடைக்கப்படு மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் இடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கு குப்பைகளை கொட்டுவதற்காக வந்த பேரூராட்சி வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து சடலத்தை நாங்கள் எங்கே புதைப்பது.? பதில் கூறிவிட்டு போ..! எனக்கூறி பேரூராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அப்பகுதி மக்கள் கூறுகையில் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், இதனால், தங்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்றுஏற்படுவதாகவும் கொசுக்கள் உற்பத்தியால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், குப்பைகள் தீவைக்கப்படுவதால் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், என புகார் தெரிவித்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் சரபங்கா ஆற்றின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து டன் கணக்கான குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படுவதோடு, இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைவதால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இங்கு குப்பை கழிவுகளை கொட்டுவதை நிறுத்துவதோடு, இங்குள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி இடுகாட்டிற்கு பாதை விட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Read More : எனக்கு 4 புருஷனா..? பெண் பாவம் பொல்லாதது சீமான்..!! விளாசிய விஜயலட்சுமி..!!