செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், ”விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. அமைதியான முறையில் சிலைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
காவல்துறையினர் தெரிவிக்கும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வாகனங்களில் வைத்து விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பாகவும், மக்களுக்கு இடையூறு இல்லாமலும் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சேலம் எஸ்.பி, கவுதம் கோயல், மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.