தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-வது நாளான இன்று 21 படி அரிசி, வெல்லம் சேர்ந்து மெகா கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேபோல், கோவை புளியங்குளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விமரிசையாக நடைபெற்றது. இது ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட 190 டன் எடை கொண்ட விநாயகர் சிலை ஆகும். மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசைகள் காத்திருந்து விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 50 கிலோ சந்தன காப்பு இடப்பட்டு, 2 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் புளியங்குளம் விநாயகரை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.