கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெரும்பள்ளம் குருசடி மெத்து பகுதியில் ஒருவரை எரித்து கொன்றதாக மதுரை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படிப்படையில், மதுரை போலீசார் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஒரு விடுதி வளகாத்தில் கேம்ப் ஃபயர் போடப்பட்ட இடத்தில் சோதனை செய்தனர். அப்போது, அந்த கேம்ப் ஃபயரில் எலும்பு துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், விடுதி வளாகத்தை சுற்றி எரிந்த நிலையில், ஆண் தலை மற்றும் மார்பு பகுதி மீட்கப்பட்டது. பின்னர், அவற்றை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விடுதியின் உரிமையாளர் கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

இதனால், விடுதி உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கொடைக்கானலில் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக மதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சிவராஜ். அவரை அவரது நண்பர்களே கொலை செய்து உடலை எரித்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்தவர் தான் சிவராஜ். இவருக்கு 60 வயதாகிறது. சிவராஜ் பல மாதங்களாக மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால், மதுரை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்போது, அங்கு அவருடன் சிகிச்சை பெற்ற மதுரையை சேர்ந்த மணிகண்டன், அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோர் பழக்கமாகியுள்ளனர். இதற்கிடையே, மதுரையில் இருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கொடைக்கானலுக்கு வந்துள்ளார் சிவராஜ்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த பின்பும் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். கடந்த மார்ச் 20ஆம் தேதி சிவராஜின் விடுதியில் அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில், சிவராஜ், மற்ற 5 பேரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், கேம்பயரில் வைத்து டீசல் ஊற்றி அவரை எரித்துள்ளனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் இருந்த சிவராஜின் உடலை, சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

சிவராஜ் மாயமானது குறித்து அவரது தங்கை கொடுத்த புகாரின் பேரில், கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, அந்த நண்பர்களில் ஒருவரான மணிகண்டன், மதுரையில் சிகிச்சை பெற்ற மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகியிடம் கொடைக்கானலில் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகி, மதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், மணிகண்டனை கைது செய்து கொடைக்கானல் போலீசிற்கு தகவல் தெரிவித்த நிலையில், இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Read More : ‘என்னை விட்டுட்டு இவன் கூட எப்படி நீ சரக்கு அடிக்கலாம்’..? உயிர் நண்பனுக்கு கத்திக்குத்து..!! உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!