மைனர் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்த நிலையில், அவரை கடத்திச் சென்று காதலன் தாலிக் கட்டிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவனுன் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும், மாணவனுடனான காதலை சிறுமி தொடர்ந்துள்ளார்.
இதனால், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பயந்து போன சிறுமி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது குறித்து தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியிக்கு ஆறுதல் கூறிய மாணவன், சிறுமியின் ஊருக்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு அய்யர்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளார்.
பின்னர், நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் அந்த மாணவன் கூறிய நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, மாணவனையும், சிறுமியையும் ஆம்னி வேனில் ஏற்றி சமரசம் பேசுவதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இந்த விஷயம் தெரிந்த சிறுமியின் குடும்பத்தினர் குளித்தலை – மணப்பாறை சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்து தாக்குதல் நடத்தினர். ஆம்னி காரை அடித்து நொறுக்கி, வேனில் இருந்த மாணவனின் உறவினர்கள் மீதும் சிறுமியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால், சம்பவ இடத்தில் பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், இதில் காயமடைந்த மாணவன் மற்றும் அவனது தம்பியை மீட்ட பொதுமக்கள், தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாணவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காரை அடித்து நொறுக்கி, மாணவன் மற்றும் அவரது தம்பி மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சிறுமியின் உறவினர்கள் சுப்பிரமணி (வயது 48), சஞ்சய் (வயது 20) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.