சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரானது அதிக அளவில் திறந்து விடப்படுவதால் சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் மேலான நீரானது மேட்டூர் அணைக்கு வந்த வண்ணமே உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த காவிரி கரையோர பகுதிகளான மேட்டாங்காடு, கல்வடங்கம், காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, பருத்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், வருவாய்த்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வெள்ளம் பாதிக்கப்படும் பகுதியில் அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளனர்.