காதலித்ததை கண்டித்த தந்தையை பழிவாங்கி இருக்கிறார் ஒரு பெண். 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பிறகு தற்போது அந்த தந்தை நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
பாலியல் அத்துமீறல் என்பது மன்னிக்க முடியாத குற்றம். இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அதே சமயம் இப்படியான போலி வழக்குகள் சட்டத்தையே கேள்விக்குறியாகி விடுகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் டெக்ராடூனில் உள்ள சிறப்பு போஸ்சோ நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி, பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் 42 வயது தந்தையை விடுதலை செய்திருக்கிறார்.
மகள் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்து இருக்கிறார் அந்த பெண்ணின் தந்தை. இதனால், கடுப்பான மகள் அவரை பொய்யாக வழக்கில் சிக்க வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார். தற்போது சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் அந்தப் பெண்ணின் காதலன் அவளை தூண்டி தந்தைக்கு எதிராக ஒரு போலியான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்த சிறுமியின் தந்தைக்கு எதிராக 2019 டிசம்பர் 25ஆம் தேதியன்று குழந்தைகள் நல அமைப்பு வழக்குப் பதிவு செய்திருக்கிறது. பெண் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறியதாகவும், அவளது இளைய சகோதரியும் அதை ஆதரித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த தந்தை டிசம்பர் 27ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைகளில் பெண் தனது காதலனுக்கு எழுதிய சில கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். குறுக்கு விசாரணையின் போது, தான் ஒரு சிறுவனை காதலித்ததாகவும், அவன் தன்னை தூண்டி குழந்தைகள் நல அமைப்பில் பொய்யான புகாரளிக்க வைத்ததாகவும் தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார் அந்த சிறுமி.
அந்த சிறுவனுடனான தனது உறவையும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதையும் தந்தை ஏற்றுக்கொள்ளாததால் அவர் மீது கோபமாக இருந்ததையும் தற்போது அந்த சிறுமி ஒப்புக் கொண்டிருக்கிறார். விசாரணையின் போது பெண்ணின் மருத்துவ அறிக்கைகள் எதிர்மறையாக வந்ததாகவும், அவள் கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த தந்தையை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்தது. காதலுக்கு எதிராக இருந்ததால் தந்தையையே போலி வழக்கில் சிறையில் தள்ளிய மகள் குறித்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Read More : பள்ளி பாடப்புத்தகங்களின் விலை அதிரடி உயர்வு..!! வகுப்பு வாரியாக எவ்வளவு அதிகரிப்பு..?