பிஎம் கிசான் யோஜனா செயலியை பயன்படுத்தி யுபிஐ-யில் பணம் மோசடி செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போன் பே, ஜி பே உள்ளிட்ட யுபிஐ செயலி மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகளவில் நிகழ்வதாக சமீபத்தில் அதிக புகார்கள் பதிவாகி உள்ளன. போன் பே வழியாக, பொதுமக்களுக்கே தெரியாமல், அவர்களது வங்கி கணக்கில் இருந்து, அதிகளவிலான பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வரப்பெற்ற அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் அமேசான் பே-க்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இதில் பிஎம் கிசான் யோஜனா என்ற மோசடி செயலியும் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும், செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி, அதில் உள்ள தரவுகளை சேகரித்து, யுபிஐ செயலிகள் மூலம் மோசடி பரிவத்தனைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இதுபோன்ற 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Readmore: பாஜக வெற்றி எதிரொலி..!! தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்..?