எடப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட தம்பி மனைவி, மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடு அருகே உள்ள பூலாம்பட்டி வளையசெட்டியூர் வன்னியர்நகரை சேர்ந்தவர் மாதையன் (60), விவசாயம் செய்து வரும் இவருக்கும், இவரது தம்பி சித்தையன் குடும்பத்தினருக்கும் இடையே, கடந்த சில வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு இருவீட்டார்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்தையனின் மனைவி ரத்தினம்மாள், மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாதையனின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி, மாதையனை கத்தியால் குத்தி, சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாதையனை உறவினர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூலாம்பட்டி போலீசார், ரத்தினம்மாள் (46), கிருஷ்ணமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக தனது பெரியப்பாவையே கத்தியால் குத்திய இளைஞரின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.