சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி, சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (வயது 55). இவருக்கும், இவருடைய உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (55) என்பவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரும் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, சம்பவத்தன்று பிரச்சனைக்குரிய நிலத்தில் கோவிந்தன் தரப்பினர் வாடகை டிராக்டர் மூலம் உழவுப் பணி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது குப்புசாமியின் மகன் வெங்கடாசலம் சென்று, டிராக்டரின் சாவியை பறித்துள்ளார். சாவியை திருப்பிக் கேட்க சென்ற கோவிந்தனிடம் வெங்கடாசலம் தகராறு செய்து அங்கு கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், வெங்கடாசலத்தின் தந்தை குப்புசாமி, தாய் ராஜாமணி, மனைவி ராஜகிளி ஆகியோரும் கோவிந்தனை தாக்கியுள்ளனர். இதில், கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிந்தனை அடித்துக் கொலை செய்த 4 பேரையும் கைது செய்தனர்.

Read More : இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!! சேலம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!