கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஷாகிராபாத் பகுதியில் மனைவியின் கள்ளக்காதலால் கணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இர்பான் என்ற நபர், தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி காலை வழக்கம்போல, வேலைக்கு மிதிவண்டியில் சென்றுள்ளார் இர்பான். அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர், அவரை வழிமறித்து, தான் கொண்டுவந்த கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், இர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையை செய்தது, சல்மான் என்பது தெரியவந்தது. அதாவது, கொலை செய்யப்பட்ட இர்பானின் மனைவி ஹாஜிராவின் தங்கையின் கணவர் தான் சல்மான்.
இந்த கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கியிருந்த சல்மானை போலீசார் கைது செய்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், இர்பானின் மனைவி ஹாஜிராவுக்கும் சல்மானுக்கு கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த நெருக்கம் குறித்து சல்மானின் மனைவி ஏற்கனவே போலீசில் புகாரளித்திருந்தார். ஆனால், இந்த பிரச்சனை சமாதானமாக முடிந்துள்ளது.
பின்னர், ஹாஜிரா துபாயில் வேலைக்கு சென்றபோது, சல்மானுடன் மீண்டும் நெருங்கி பழகியுள்ளார். அதேசமயம், ஹாஜிரா இந்தியா திரும்பும் போது சல்மானுடன் வாழ திட்டமிட்டிருந்துள்ளார். இதற்கிடையே, ஹாஜிரா தனது 3 குழந்தைகளில் 2 பேரை சல்மான் பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், இதனை கணவர் இர்பான் ஏற்க மறுத்ததால், இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சல்மானை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.