கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் அதன் முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் அணையின் நலன் கருதி காவிரி அற்றிக்கு வினாடிக்கு 23,000 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி இன்று மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி அரசிராமணி பிட் 1 பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கான தண்ணீர், மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் இருந்து கிளை கால்வாயாக பிரிந்து குள்ளம்பட்டி ஏரியை சென்றடைகிறது. ஆனால், கிழக்கு கரை கால்வாயில் இருந்து ஏரியை கடக்கும் நீர் வழிப்பாதையை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் இருப்பவர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், குள்ளம்பட்டி ஏரிக்கு சரியாக தண்ணீர் செல்லாமல் தரிசு நிலங்களில் சென்று வீணாகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் முன்பு இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இந்த ஏரியை நேரில் வந்து ஆய்வு செய்து இதற்கு தீர்வு காண்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது வரை எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஏரிக்கு செல்லும் நீர் வழிப்பாதையை அகற்றி ஏரிக்கு தண்ணீர் செல்ல வழி வகுக்கும்படி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த ஏரியின் மூலம் 1,000 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள், இந்த ஏரியின் தண்ணீரையே நம்பி இருப்பதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.