சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் தொடங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செல்வம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ”நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள் 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும்.

ஆனால், 27 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எடப்பாடி பழனிசாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரில் எடப்பாடி பழனிசாமி இணைப்பு வாங்கியுள்ளார்.

மேலும், காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக 2023இல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Read More : அதிர்ச்சி!. உணவகத்தில் கடன் பாக்கி!. திருப்பி கேட்ட உரிமையாளரை ஷூவை கழற்றி அடிக்க வந்த போலீஸ்!. பாய்ந்த நடவடிக்கை!