திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலின் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டி தான் இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். முருகப் பெருமானே பக்தர் ஒருவரின் கனவில் வந்து சொல்லும் பொருள் இந்த பெட்டியில் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது. அடுத்த பக்தர் வந்து சொல்லும் வரை அந்த பொருள் மாற்றப்படுவதில்லை. இந்த ஆண்டவர் பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.

இதற்கு முந்தைய காலங்களில் துப்பாக்கி தோட்டா, சைக்கிள், திருமாங்கல்ய கயிறு, தராசு உள்ளிட்ட பல பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்களுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது என்றாலும், குறைந்தபட்சம் ஒரு மாதங்களாவது ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் மாற்றப்பட்டாமல் இருந்துள்ளது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் சின்னாண்டகோயிலை சேர்ந்த தணிகைநாதனின் (33) கனவில் மண் விளக்கு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது. அதன்படி, நவம்பர் 12 ஆம் தேதி முதல் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு முன்னேறும் என்பது நம்பிக்கை. அவர்களுடைய தொழில் விருத்தியாகும் என சொல்லப்பட்டது.

இதுகுறித்து தனிகைநாதன் கூறுகையில், ”திருச்செந்தூர் முருகன் குழந்தை வடிவில் மயிலுடன் கனவில் வந்து, சிவன்மலை பெட்டியில் மண்விளக்கு வை என தெரிவித்ததாகவும், அதன்படி மண்விளக்கு கொண்டு வந்ததாகவும்” தெரிவித்தார். இதுபற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறுகையில், ”சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, மண்விளக்கு வைத்துள்ளதால் இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், அண்மையில் ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் அதிக மழை பொழிவு இருந்தது. அப்போது டிசம்பர் 3-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் மண்ணுக்குள் புதைந்து சடலமாக மீட்கப்பட்ட துயர சம்பவம் நடந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மண் சரிவை கடந்த 20 நாட்களுக்கு முன்னரே சிவன் உணர்த்திவிட்டதாகவும் அதற்கு சாட்சியாகத்தான் மண் விளக்கை சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

Readmore: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,098 கன அடி!. கிடுகிடுவென உயரும் அணையின் நீர்மட்டம்!.