தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பனையூர் அலுவலகத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இந்நிலையில், அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் இருப்பதை கண்டித்து விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ.செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், ”தவெக கொடியில் கேரளா போக்குவரத்துக் கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும், வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவெக-வினர் பயன்படுத்தியுள்ளனர்.
ஆகவே, இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் விஜய் மீது தேச குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால் அதனை நீக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளிக்கவுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடை..!! மத்திய அரசு அறிவிப்பு..!!