விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய மாநாட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி கொடியை ஏற்றி வைத்து, கட்சி சின்னம் அடங்கிய துண்டை அணிந்து வந்திருந்தார். இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். மாநாட்டில் தங்களது கொள்கை தலைவர்கள், அரசியல் எதிரிகள் பற்றிக் கூறிய விஜய், “இங்கே ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசிவிட்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் இந்த பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்வளவுதான். ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா… அவர்களுக்கு நீங்களும் கொஞ்சமும் சளைக்காதவர்கள்தான். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். அதனால், இனிமேல் உங்களை எதிர்க்கிறவர்களுக்கு என்னதான் நீங்கள் கலர் பூசும் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டிக் கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் நம் அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்.” என்று நேரடியாகவே திமுக-வை சாடினார்.

Readmore: தமிழகத்திற்கு கனமழை அலர்ட்!. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?. வானிலை மையம் அப்டேட்!.