நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், நெல்லையில் சில தினங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பலர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் நெல்லை செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சீமான் புரட்சிகரமாக பேசுவார்.ஆனால் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.நமக்கு முன் யாரும் எம்.எல்.ஏ ஆக கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.சீமானுக்கு கொள்கையில் விருப்பம் இல்லை.

நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் அடிமைகளாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தையும், வேலையையும் துறந்து கட்சிக்காக உழைக்கிறோம். ஆனால் அதற்கான அங்கீகாரம் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை அறிந்து கட்சியை விட்டு வெளியேறுகிறோம்.

சீமானின் ஆவேசப் பேச்சை நம்பி நம்மைப் போன்ற இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்து வலையில் சிக்கிய புழுக்களைப் போல் ஆகிவிடாதீர்கள், சீமான் உளவியல் சித்ரவதையில் இருக்கிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் அல்ல. நாம் தமிழர் கட்சியினர் தூங்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். சீமான் பதற்றத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினியை எதிர்க்கிறார்; ஆனால் சீமான் சென்று சந்திக்கிறார்.

சங்கி என்றால் சக தோழர் என்று பதில் சொல்கிறார் சீமான். சங்கி என்றால் சக நண்பன் என்று சொல்லி நம்மை சங்கியாக்க முயல்கிறார். இவர் ரவீந்திரன் துரைசாமி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரருடன் நெருக்கமாகவும் நட்பாகவும் இருக்கிறார். மறுநாள், நான் சங்கியா என்கிறார்? ஒருநாள் விஜய்யை ஆதரிக்கிறார்; மறு நாள், அவர் எதிர்க்கிறார்.

சீமானின் கருத்துக்கு மட்டுமல்ல, நாங்கள் களப்பணியாற்றுவதால்தான் வாக்குகள் கிடைக்கின்றன. தினமும் சீமான் விதவிதமாக பேசுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அவர் சொல்வதையெல்லாம் நாங்கள் ஆதரிக்கிறோம். எவ்வளவு காலம் அடிமைகளாக இருக்க முடியும். சீமானை செய்வினை பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர். எங்களை கோமாளிகளாக காட்டுகிறார்கள் அதனால் தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து சுமார் 50 பேர் வெளியேறுகிறோம் என்றார்.

Readmore: தாய்மார்களே கவனம்!. உங்க குழந்தைக்கு 2 வயது வரை இந்த உணவுகளை கொடுக்காதீங்க!.