சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேம்பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்களை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை என்ற ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 15.10.2024 விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். முன்கூட்டியே மக்களை அங்குத் தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள், ஆவணங்களை நீர் புகாவண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். கனமழை எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலாத் தலங்கள், நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டாம். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழையளவு, அணைகளின் நீர்வரத்தைக் கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதிக கன மழை வார்னிங் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நான்கு சக்கர வாகனமான கார்களை வேளச்சேரி – பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி நிறுத்தி உள்ளனர். வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் காரை உடனடியாக அங்கிருந்து எடுக்கும்படி போக்குவரத்துப் போலீசார் கார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினர். இதனை ஏற்க மறுத்த கார் உரிமையாளர்கள் கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மறுத்துவிட்டனர். இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதே போன்று பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

அதாவது வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வருடம் வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது, குடியிருப்புகள் முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: விவசாயிகளே!. உடனே இத பண்ணிடுங்க!. ரூ.65 கோடி மானியம்!. மத்திய, மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு!