மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக ஒரு பொய்யான வழக்கை ரவிகாந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், ”கோவை ரங்கே கவுடர் வீதியில் 60 வருட பாரம்பரியமிக்க ஒரு நிறுவனமாக எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.

மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என ஒரு பொய்யான வழக்கை சென்னை ஐகோர்ட்டில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எங்கள் தயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் எந்த விதமான வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மேலும் பொய்யான வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்தின் முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் 7ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவில் மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு தாக்கல் செய்த ரவிகாந்த் ஒரு தனியார் ஆய்வக அதிகாரியிடம் மிரட்டி பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார். இதற்கு பின்புலமாக கோவையில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளார் என்பது நாங்கள் பெற்ற தகவல்படி தெரியவந்தது. மேலும், மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் சிலர் பரப்பினர்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். இந்த வீடியோவை ஏற்கனவே வழக்கு தொடர்ந்த ரவிகாந்த் தான் பரப்பி வருகிறார் என்று புகார் அளித்து இருந்தோம். இது குறித்து விசாரணைக்கு நேரில் கடந்த 22ஆம் தேதி ஆஜராகுமாறு ரவி காந்த்திற்கு கோவை கடை வீதி போலீசாரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரும் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் ரவி காந்த் நேரில் வந்துவிட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றார்.

அவரது வழக்கறிஞர் என கூறிகொண்டு வந்த நெடுஞ்செழியன் என்பவர் மட்டும் இரண்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறிது நேரம் இருந்துவிட்டு ரவி காந்த்தை அழைத்துக் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்ற அவரும் இதுவரை வரவில்லை. இதிலிருந்து அவதூறு வீடியோவை பரவ விட்டது ரவிகாந்த் என்பது தெளிவாக தெரிகிறது. இவனது பின்புலமாக செயல்பட்டவர் யார் என்பது விரைவில் வெளி உலகிற்கு வந்துவிடும். அதனால் தான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றுள்ளான்.

ரவிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம். பொதுமக்களுக்கு நாங்கள் சொல்வது, தரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் எங்கள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே அனைத்து வயதினரும் சாப்பிடும் விதத்தில் மிகவும் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி..!! இனி முழு பணத்தையும் செலுத்திய பிறகே மறு அடகு வைக்க முடியும்..!!