குளிர்காலம் காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. சில பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு குளிர்காலம் கடினமாக இருக்கும். குளிர் சீசனில் பலருக்கு வரும் எதிர்பாராத பிரச்சனைகளில் ஒன்று குளிர்கால தலைவலி (winter headache). குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கோல்டு ஸ்டிமியூலஸ் (cold-stimulus) தலைவலி. இது ஐஸ்கிரீம் தலைவலி (ice-cream headache) அல்லது மூளை உறை தலைவலி (brain-freeze headache) என்றும் அறியப்படுகிறது.
குளிர் காலத்தில் உடலில் உள்ள சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைவான பகல்பொழுது, நீண்ட இரவு என பகலிரவு சமநிலை மாற்றம் அடைகிறது. இதனால், மனிதர்களின் தூக்கம் – விழிப்பு முறையும் மாற்றமடைந்து தலைவலி ஏற்படுகிறது. மண்டையோட்டின் முன்புறம் உள்ள சைனஸ் துவாரங்கள் காற்றினால் நிரப்பப்பட்டு வளிமண்டலத்துடன் சமநிலை பேண உதவுகின்றன. பருவநிலை மாற்றத்தால், குளிர்காலத்தில் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமும் இந்த சமநிலையை குலைத்து தலைவலி ஏற்பட காரணமாகின்றன.
குளிர் வெப்ப நிலை மற்றும் குறைவான பகல் பொழுதால் வளிமண்டல அழுத்ததில் ஏற்படும் மாற்றம் ஆகியவை மனிதர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் தலைவலி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். குளிர்காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறும்போது தலை மற்றும் கழுத்தை மறைக்கக்கூடிய குளிர்கால ஆடைகளை கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.
சரியான இரத்த ஓட்டத்திற்கு உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை நிதானமாக வைத்திருங்கள். நீங்கள் அசௌகரியமாகவோ, பதற்றமாகவோ உணர்ந்தால், தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். கழுத்தினை மெதுவாக வட்டவடிவில் சுழற்றுங்கள். தூக்கம் மற்றும் விழிப்பு முறையை சரியாக கடைபிடியுங்கள். அதாவது ஒவ்வொரு இரவும் சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழித்துக்கொள்ளுங்கள். 8 மணி நேர உறக்கத்தை கடைபிடியுங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நீராவி எடுத்து சைனஸ் பிரச்சனை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முகத்தை தினமும் மசாஜ் செய்ய ஜேட் ரோலர் (jade roller) அல்லது குவா ஷா (gua sha) போன்ற முக மசாஜ் கருவிகளைப் பயன்படுத்தவும். இவை சைனஸ் பிரச்சனை மற்றும் தலைவலி ஏற்படுவதை தடுக்க பயன்படுகிறது. நாள்தோறும் மூன்றுவேளைகளிலும் சரியான நேரத்தில் உணவு எடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவு எடுக்காமல் தவிர்ப்பது தலைவலியை ஏற்படுத்தும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதனை Idp7News உறுதி செய்யவில்லை.