காதலை கைவிட மறுத்த மகளுக்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதி முனுசாமி – மல்லிகா. இவர்களுக்கு குறிஞ்சி (வயது 20) என்ற மகள் இருக்கிறார். இவர், தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம், சாய்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளார்.
இந்த விஷயம், குறிஞ்சியின் தாய் மல்லிகாவுக்கு தெரிந்துவிட்டது. இதனால், காதலை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், சாய்குமாருடன் குறிஞ்சி தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாய் மல்லிகா, சொல்பேச்சை கேட்காத மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, முட்டை பொரியலில் எலி மருந்தை கலந்து மகள் குறிஞ்சிக்கு கொடுத்துள்ளார். இதை அவரும் சாப்பிட்டுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்துதான், உணவில் விஷம் கலந்து கொடுத்ததை குறிஞ்சியிடம் சொல்லியிருக்கிறார் தாய் மல்லிகா.
இதைக்கேட்டதுமே மகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, குறிஞ்சியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து குறிஞ்சி அளித்த புகாரின் பேரில் தாய் மல்லிகா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.