தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமை எப்போது கிடைத்தது தெரியுமா..? இதுபற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக் கொடி, நாட்டின் அடையாளம் மட்டுமல்ல, மாநில அரசுகளின் அங்கீகாரமும் கூட. சுமார் 250 வருடங்களுக்கும் மேலாக சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயர் கொடிக்கு பதிலாக, 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற போது, முதல் முறையாக எழுச்சியுடன் பறந்தது நம் நாட்டு தேசியக் கொடி. அன்று தொடங்கி ஒவ்வொரு குடியரசுத் தினம், சுதந்திர தினத்தன்று மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். அதெல்லாம், 1973ஆம் ஆண்டு வரை மட்டும் தான்.
அதன் பிறகுதான் மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றனர். இந்த உரிமை 50 ஆண்டுகள் எனும் பொன்விழாவை எட்டியிருப்பதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தான். 1969-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் பேசிய கருணாநிதி, சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை ஏன் முதலமைச்சர்களுக்கு வழங்க கூடாது என கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் சந்தித்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவர, ஒருவழியாக பல்வேறு விவாதங்களுக்கு பிறகு, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்று ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, 1974 ஆகஸ்ட் 15 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்று தந்த 50ஆம் ஆண்டு இது. அதே இடத்தில், இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றியிருக்கிறார். சுதந்திர திருநாள் ஒவ்வொருவருக்கும் விடுதலை நாள் என்றால், முதலமைச்சர்களின் உரிமையை கருணாநிதி சாத்தியப்படுத்திய நாளும் இன்றுதான்.