ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் செய்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல், விவசாயிகள், பெண்கள், ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்கள், மருத்துவ காப்பீடுகள், விவசாய பொருட்களுக்கான மானியம் என பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.

இந்தநிலையில், மத்திய அரசின் உத்தியோகினி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுய தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தும் வகையில், ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. வட்டி மட்டும் இன்றி குறிப்பிட்ட தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பொருளாதார ரீதியாக சாதாரண பெண்கள் முன்னேற்றம் அடையும் வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டம் உத்தியோகினி. பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டம் போதிய அளவு மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. இதனால் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது உத்தியோகினி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்கவும் தங்கள் தொழிலை விரிவு செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை வங்கி கடன் மூலமாக கிடைக்கும். இதற்கு வட்டி கிடையாது. அதுமட்டும் இன்றி மானியமும் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் ஒன்றரை லட்சம் மானியமாக கிடைக்கும். இதர பிரிவினர் என்றால் 30 சதவிகிதம் மானியம் கிடைக்கும். மீதமுள்ள ஒன்றரை லட்ச ரூபாயை வட்டி இன்றி தவணை முறையில் திருப்பி செலுத்தி கொள்ள முடியும்.

மளிகை கடைகள், தேயிலை தூள் தயாரிப்பு, தையல் கடைகள் உள்ளிட்ட 88 வகையான சிறு குடிசை தொழில்களை செய்ய கடன் பெறலாம். ஏற்கனவே இந்த தொழில்களில் இருந்தால், அதனை விரிவு படுத்தவும் கடனுதவி கிடைக்கும். 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

என்ன தொழில் செய்ய இருக்கிறீர்கள்.. எவ்வளவு செலவு ஆகும், வருமானம் ஆதாயங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, புகைப்படங்கள், ஆண்டு வருமான சான்றிதழ், உள்பட கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

இதற்கு முன்பாக கடன் வாங்கி கட்டாமல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 47 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். தற்போது ஒரு கோடி பெண்கள் பயன்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: சேலத்தில் சித்தப்பாவை பார்க்க சென்ற பெண்ணுக்கு சரமாரி அடிஉதை!. அண்ணனின் வெறிச்செயலால் அதிர்ச்சி!.