கலைஞர் உரிமைத்தொகை என்ற இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறையில் இருக்கிறது. இதன்படி குடும்ப அட்டை அடிப்படையில் குடும்பத்தின் மொத்த வருமானம் கணக்கிடப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 1000 ரூபாய் பெறுவதற்கு பலர் விண்ணப்பம் செய்து இருந்தாலும் மிகுந்த கவனத்துடனே பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தகுதி இல்லாத சிலரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதந்தோறும் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது.
அதாவது, 5 ஏக்கருக்கும் மேலாக நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதிபெற முடியாது. கார், டிராக்டர் உள்ளிட் வாகனங்கள் வைத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் அல்ல. இருப்பினும், இதனை அரசிடமிருந்து மறைத்து ரூ.1,000 பெற்று வருகின்றனர். இவர்களால், தகுதி வாய்ந்த பெண்களுக்கு பணம் கிடைக்காமல் போகிறது. அதனால், இத்தகைய பயனாளிகள் இத்திட்டத்தில், இருந்து நீக்கப்பட்டால், புதிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பணம் கிடைக்கும்.
இந்த நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு தெரிந்து யாராவது தகுதி அல்லாத நபர்கள் மாதந்தோறும் 1000 ரூபாயை வாங்குகிறார்கள் என்பது தெரிந்தால் அதனை ஆன்லைன் வாயிலாகவே எளிதாக புகார் அளிக்க முடியும். இதற்கு https://kmut.tn.gov.in/public_complaints.html பக்கத்திற்கு செல்ல வேண்டும் . அதில் புகார் தெரிவிக்கும் நபர் அவருடைய பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியை உள்ளிட வேண்டும் . இதில் பெயரும் தொலைபேசியும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தகுதியற்ற நபர் யார் என்பது குறித்த விவரங்களை குறிப்பிடுவது கட்டாயம். அந்த தகுதியற்ற நபரின் பெயர் ,அவர் வசிக்கும் மாவட்டம், வட்டம் ஆகிய மூன்றையும் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். இது தவிர அந்த நபரின் கைபேசி எண், வருவாய் கிராமம் ,ரேஷன் கடை, முகவரி ஆகியவை தெரிந்தால் உள்ளீடு செய்யலாம் தெரியவில்லையெனில் விட்டுவிடலாம்.
இவ்வாறு பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகுதிகளை வருவாய்த்துறை, உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். அப்போது, பயனாளியின் தகுதியின்மை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கான ரூ.1,000 பணம் நிறுத்தப்படும்.