‘தி.மு.க., கூட்டணியை நம்பி தான் தேர்தலில் நிற்கிறது. தி.மு.க.,வை நம்பி இல்லை. அ.தி.மு.க., அப்படி இல்லை. தொண்டர்களையும், மக்களையும் நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறோம், ” என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மண்டபத்தில், நேற்று பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. ஐ.ஜே.கே., முன்னாள் மாநில தலைமை நிலைய செயலரும், நகராட்சி கவுன்சிலருமான வரதராஜன் தலைமையில், 1,200 பேர், அ.ம.மு.க., பா.ம.க., தி.மு.க.,வை சேர்ந்த, 200 பேர் என மொத்தம், 1,400 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது, அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். எனக்கு முதல்வர் வாய்ப்பு உங்கள் மூலம் தான் கிடைத்தது. பொதுச்செயலர் பதவியும், சேலத்தை சேர்ந்த எனக்கு கிடைத்தது. சேலம் அ.தி.மு.க., கோட்டை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தி விட்டனர்.
ஏழை மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வந்த, 2,000 அம்மா மினி கிளினிக் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், குடிமராமத்து திட்டத்தை நிறுத்திவிட்டனர். மக்களுக்கான நல்ல திட்டம் என்றாலே தி.மு.க.,வுக்கு பிடிக்காது. கடந்த, 2021ல், 1,000 தடுப்பணை கட்டுவதாக அறிக்கை விட்ட, தி.மு.க., ஒரு இடத்தில் கூட தடுப்பணை கட்டவில்லை. ஆத்துார் அரசு மருத்துவமனையில், 60 மருத்துவர்களுக்கு, 18 பேர் மட்டுமே உள்ளனர். போதிய மருத்துவரும் இல்லை; மருந்துகளும் இல்லை. இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தலைவாசலில், கால்நடை பூங்கா கட்டி இரண்டரை ஆண்டுகளாகியும் திறக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடான நிலையில் உள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மீட்கவே முடியாது.
ஆனால், இன்று ‘டிவி’யில் போதை பொருளை கைவிடுங்கள் என்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அவரே, கஞ்சா புழக்கத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க., கூட்டணியை நம்பி தான் தேர்தலில் நிற்கிறது. தி.மு.க.,வை நம்பி இல்லை. அ.தி.மு.க., அப்படி இல்லை. தொண்டர்களையும், மக்களையும் நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறோம். இதுதான், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் உள்ள வித்தியாசம். 2026ல், பிரம்மாண்டமான கூட்டணி அமைக்கப்படும். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அ.தி.மு.க., அமைக்கும் என்று கூறினார்.