பள்ளி மாணவ- மாணவிகளிடையே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் குறித்த சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளனர். இருநாட்களுக்கு முன்பு எடப்பாடி அருகே சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கூறி அரசு தற்காலிக ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

இந்தநிலையில், பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளிடையே ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், பள்ளி மாணவ- மாணவிகளிடையே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு POCSO சட்டம், பள்ளிகளில் SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதுசார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாணை 121-ன் கீழ் மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடாக, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, தண்டனை வழங்குதல், கட்டாய ஓய்வு (Compulsory Retirement) பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal), மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Student Safeguarding Advisory) அமைக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு உறுதி மொழி எடுத்தல், ஒவ்வொறு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைந்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 1098 ஆகிய தொடர்பு எண்களை மாணவ / மாணவிகள் அறிந்துகொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Readmore: இனி உங்க பான் கார்டு செல்லாது?. QR கோடு அம்சத்துடன் PAN 2.0 அறிமுகம்!. மத்திய அரசு அதிரடி!