விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால், வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் சிலர் மயக்கமடைந்து வருகின்றனர்.
மாநாடு குறித்த பரபரப்பான செய்திகள் பேசுபொருளாக, இன்று அதிகாலை முதலே மாவட்டந்தோறும் த.வெ.க தொண்டர்கள் ஆரவாரத்துடன் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். சென்னையிலிருந்து வரும் மக்கள் கூட்டத்தைவிட, தென் தமிழகத்திலிருந்து வரும் கூட்டம் பெருமளவிருக்கிறது. மாநாடு நடக்கும் வி.சாலை பகுதியிலிருந்து 6 கிலோமீட்டர் வரையில் மக்கள் நெடுஞ்சாலையோரம் வரிசைக் கட்டி நிற்கின்றனர். 6 கிலோமீட்டரைக் கடப்பதற்கு 2 மணிநேரமாகிவிடுகிறது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முதல் 6 கிலோமீட்டருக்கு வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. மாநாட்டு அரங்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணமிருக்கிறது. மாநாட்டு அரங்கு கூடுதலாக விரிவாக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் ஏரியாவும் 12 ஏக்கர்கள்வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கணக்கிட்டதைவிடவும் மிகவும் அதிகமான மக்கள் கூட்டம் வந்துள்ளதால் தண்ணீர் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. கட்டுங்காத நிலைமையை உணர்ந்த த.வெ.க நிர்வாகிகள் தண்ணீர், உணவுக்கான ஏற்பாட்டை அதிகப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூடுதலாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து வாட்டி வருகிறது. இப்படியான நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு மாநாட்டை முன்கூட்டியே 3 மணிக்கெல்லாம் தொடங்கி, முடிந்த அளவிற்கு விரைந்து முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேனாம்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், சென்னையில் இருந்து ரயில் மூலம் விழுப்புரத்திற்கு பலர் சென்றுள்ளனர். ரயில் விழுப்புரம் அருகே சென்ற போது மாநாட்டு பந்தலை பார்த்து ஆர்வமிகுதியால் கீழே குதித்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதவிர தாம்பரம் அருகே தவெக மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்த வாகனம் விபத்தில் சிக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
இந்தநிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். அவர்களை காவல் துறை உதவியுடன் தொண்டர்கள் மீட்டு, அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்து வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக சிலரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், ஆனால், மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து ஆம்புலன் வெளியே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.