திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குடும்பத்தினருக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சிரிவேள்ளிபுத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகிய இருவருக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் வருண்குமார் மீது அவதூறு கருத்துக்களை, ஆபாசமாக வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தான், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், “அவதூறு கருத்து பரப்பியதற்காக கண்ணன் கைது செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.