தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஊருக்குச் செல்ல திட்டமிட்ட இளம் பெண் தனது தாயுடன் பேருந்துக்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்து நின்ற காரில் அந்த இளம்பெண் திடீரென ஏற முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த அவரது தாய் தன் மகளை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் காரில் ஏறிய இளம்பெண் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அந்த இளம் பெண்ணின் முடியை பிடித்தவாறு அவரது தாய் காரின் பின்னால் ஓடியுள்ளார். இதனைப் பார்த்த பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காரை தடுத்து நிறுத்தி இளைஞர்களை கீழே இறக்கி விசாரித்தனர். விசாரணையில், காரில் வந்த இளைஞர்களில் ஒருவர் அந்த இளம் பெண்ணின் காதலன் என்பதும், தப்பிச்சென்று அந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளம் பெண்ணை காரில் இருந்து கீழே இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மறுக்கவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் இளம் பெண்ணை காரில் இருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் 2 வருடங்களுக்கு மேலாக அந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தப்பிச்சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண் தன் தாயாருடன் செல்ல மறுத்ததால் அவரை துடியலூர் பகுதியில் உள்ள காப்பகத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
பெண்ணிற்கு 19 வயது ஆவதால் தற்காலிகமாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர். பெண்ணின் விருப்பப்படி சென்றதாலும் கடத்தல் இல்லையென்பதாலும் வழக்கு எதுவும் பதியவில்லை என்றனர்.
Readmore: ”சார் எங்கள நீங்க தான் காப்பாத்தணும்”!. அடுத்தடுத்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!.