பெற்ற தாயின் தலைமுடியை இழுத்து கொடூரமாக தாக்கும் மகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் சொத்து தகராறு காரணமாக தன்னுடைய தாய் நிர்மலா தேவியை, மகல் ரீட்டா கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சொத்துக்காக தாயை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், தனது தாயை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது சகோதரி கொடுமைப்படுத்துவதாகவும் அந்தப் பெண் மீது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், மகள் ரீட்டா, தனது தாய் நிர்மலா தேவியுடன் ஒரு படுக்கையில் அமர்ந்திருக்கிறார். அப்போது, தாய் நிர்மலா தேவி அழுதுக் கொண்டிருக்கிறார். பின்னர் தாயை திட்டிவிட்டு, அவரது காலில் கடுமையாக தாக்குகிறார். மேலும், ஆத்திரத்தில் தாயின் தொடையில் அடிக்கிறார். நான் உங்க ரத்தத்தை குடிப்பேன் என்றும் மிரட்டுகிறார்.
ரீட்டாவின் சகோதரர் அமர்தீப் சிங் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், ”தனது சகோதரி ரீட்டா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சஞ்சய் புனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கே திரும்பினார். பின்னர், அவர் சொத்துக்காக தாயைத் துன்புறுத்தத் தொடங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.