பெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சேலம் கெங்கவல்லி பகுதியில் 6க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் பயுல் எதிரொலியாக, சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்தநிலையில், வீரகனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலி தொழிலாளியான இவர், குடும்பத்தினருடன் சிமென்ட் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழைக்கு, நேற்று அதிகாலை அண்ணாதுரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பீரோ, பிரிட்ஜ், டைனிங் டேபிள், ட்ரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பொருட்கள் உடைந்து சேதமடைந்தன.
இதேபோல், வீரகனூர் புத்தர் சிலை பகுதியில் வசித்து வரும் அம்பிகா, கெங்கவல்லி 74.கிருஷ்ணாபுரம் கிழக்கு வீதியில் வசிக்கும் மாணிக்கம், ஆத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் ஊமையன், நடுவலூர் பகுதியில் வசிக்கும் பிலிப்ஸ், ஆணையாம்பட்டியில் திருச்சி மெயின் ரோட்டில் வசிக்கும் காதர் பாஷா ஆகியோரது வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விஏஓக்கள் ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளனர்.