கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 22,000 கன அடியாகவும், ஞாயிறுக்கிழமையான இன்று வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி இன்று முதல் தற்காலிகத் தடை விதித்துள்ளார். இதன் காரணமாக பிரதான அருவி செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு, சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டது.

விடுமுறை தினமான இன்று, ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுப் பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,