எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். 24 வயதான இவர், கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், வேலைக்கு தனது பைக்கில் செல்வது வழக்கம். அதன்படி, நேற்றும் வேலைக்கு சென்றுள்ளார். இரவு, தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எடப்பாடி – சேலம் பிரதான சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது எருமைப்பட்டி, பிரிவு ரோடு பகுதியில் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. கார் வந்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் பாஸ்கர் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொங்கணாபுரம் போலீசார், படுகாயமடைந்த பாஸ்கரை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ்கர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: உங்கள் காதுகளை இப்படி அடிக்கடி சுத்தப்படுத்துகிறீர்களா?. இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்!.