நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து தான் விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

தற்போது தனது 69-வது படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பல கட்ட ஆலோசனைக்கு பிறகு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாநாடு தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதாவது, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் முதலமைச்சர் ரங்கசாமியின் படம் இடம் பெற்றுள்ளது. “2026-ல் ஆளப்போறான் தமிழன்” என்ற வாசகத்துடன் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு… தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் இந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: தந்தைக்கு சித்தி மீது ஆசை!. குழந்தைகளை காவு வாங்கிய சித்தப்பா கைது!. திடுக்கிடும் வாக்குமூலம்