எடப்பாடியில் தனியார் பள்ளி வேனில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் வேனில் இருந்து கீழே விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி தாவாந்தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அழைத்து கொண்டு பள்ளி வேன் ஒன்று புறப்பட்டது. ரித்திகுமார் என்பவர் ஓட்டிச்சென்றார். வெள்ளாண்டிவலசு பகுதியில் சென்றபோது, 7ம் வகுப்பு மாணவனுக்கும், 9ம் வகுப்பு மாணவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், 9ம் வகுப்பு மாணவன் வேனில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக வேனை நிறுத்திய ஓட்டுநரும், சக மாணவர்களும் சேர்ந்து படுகாயமடைந்த மாணவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், அந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.