தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்தாண்டு டிச. 28ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். மேலும், பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, போலீசார் தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், பேரணி நடைபெற்றது. பேரணி விஜயகாந்த் நினைவிடம் வந்தடைந்த பின், விஜயகாந்த் சிலை முன் நின்று தேமுதிக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தின்போது, கழுகு பறந்தது. இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அவருடைய நினைவிடத்திற்கு மேல் இன்று மீண்டும் ஒரு கழுகு பறந்தது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சுடச்சுட பிரியாணி தயார் செய்யப்பட்டு வருகிறது. அவை ஒரு டப்பாவில் போட்டு தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது.