கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் மனைவி, குழந்தைகள் மற்றும் தன்னுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சம் கேட்பது இயல்பு. ஆனால், மனைவி கேட்கும் தொகையை அப்படியே கொடுக்க நீதிமன்றமும் சம்மதிக்காது. பெண்ணின் தேவையை பொறுத்தும், கணவரின் சம்பளத்தை பொறுத்தும் ஜூவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.
ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ராதா முனுகுந்தலா என்ற பெண், தனக்கு மாதம் ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஜூவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவிடக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வளவு தொகையை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அந்த பெண்ணின் வழக்கறிஞர் 6,16,300 பணத்திற்கான செலவுகளை பட்டியலிட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், செருப்பு, ஆடைகள், வளையல் மற்றும் மற்ற பொருட்கள் வாங்க ரூ.15 ஆயிரமும், வீட்டில் உணவு சமைத்து சாப்பிட ரூ.60 ஆயிரமும், உணவகம் உள்ளிட்ட வெளி இடங்களில் ஆகும் செலவுக்கு சில ஆயிரங்களும், மருத்துவ செலவுக்கு ரூ.4 முதல் 5 லட்சமும் என மாதம் ரூ.6,16,300 தேவைப்படுகிறது. அந்த தொகையை பெண்ணின் கணவர் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதை கேட்டு கடுப்பான நீதிபதி, ”குடும்ப பொறுப்புகள் எதுவும் இல்லாமல், தனித்து வாழும் பெண்ணுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா..? அவருக்கு பணம் வேண்டுமென்றால், சம்பாதிக்க சொல்லுங்கள். கணவரிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம். அடிப்படை தேவைக்கு மட்டும் என்ன பணம் வேண்டுமோ அதை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். பெண்ணிடம் சண்டையிட்டு பிரிந்ததற்காக இவ்வளவு பெரிய தொகையை தர வேண்டுமென கணவருக்கு தண்டனை தர முடியாது. உங்கள் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால், மனு தள்ளுபடி செய்யப்படும்” என எச்சரித்தார். இதையடுத்து, வழக்கையும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Read More : கைவிட்டு சென்ற கணவன்..! மனைவி எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!