சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த காவிரிக்கரை பாசன பகுதியில் நடப்பாண்டில் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சத்து நிறைந்த வண்டல் கலந்த செம்மண், கரும்பு விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த பகுதியில் உருட்டு சம்பா, சன்ன சம்பா, ரஸ்தாளி கரணை, பூங்கரணை உள்ளிட்ட அதிக சுவையுள்ள கரும்பு வகைகளையே விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
எப்போதுமே விளைச்சல் அதிகம் இருந்தாலும், கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடையே இருந்து வருகிறது. எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.