நாமக்கல்லில் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆசை வார்த்தைகளை கூறி 19 வயது கல்லூரி மாணவியை கடத்திச்சென்று கர்ப்பமாக்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (39) . எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் விஜயகுமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அண்ணன் என்ற முறையில் பழகி வந்தாக கூறப்படுகிறது. இருப்பினும், விஜய்குமார் மாணவி மீது ஆசை வளர்த்து வந்துள்ளார். இதனை அறியாத அந்த மாணவி சகஜமாக பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட விஜயகுமார், மாணவியை கல்லூரிக்கு அடிக்கடி தனது பைக்கில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய தாயுடன் கோவில் திருவிழாவுக்கு சென்ற மாணவி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை தேடி வந்தனர்.
இதேபோல் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் விஜயகுமாரை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், தலைமறைமாக இருந்த விஜயகுமார் மற்றும் மாணவியை கண்டுபிடித்தனர். இருப்பினும் மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசை வார்த்தைகளை கூறி விஜயகுமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து தங்களுடைய மகளுக்கு நீதி வேண்டும் என கூறி அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.