நாம் தமிழர் கட்சியில், மண்டல நிர்வாகிகள் விலகுவதும், முக்கியப் பொறுப்பாளர் நீக்கப்படுவதும், அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வதும் தற்போது தொடர்கதையாகி இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்வாதிகார அணுகுமுறையும் உட்கட்சி ஜனநாயகமின்மையும்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்கிறார்கள் விலகினவர்களும் விவரமறிந்தவர்களும்.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான், சக நிர்வாகிகளிடம் பேசும் பல ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அந்த கட்சியில் பெரும் புயலை கிளப்பிவிடுகின்றன. ஆனால் சீமானோ அப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்கிற பாணியில் கடந்து சென்றுவிடுவார். சீமான் பேசிய இந்த ஆடியோக்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டிருப்பது அவருடனேயே பயணிக்கிற நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்தான். அதில் ஒருவர்தான் நத்தம் சிவசங்கரன்.
நத்தம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்தி வருபவர். சீமான், நத்தம் சிவசங்கரன் குறித்து பேசிய ஆடியோ வெளியான நிலையில் திமுகவுக்குப் போகப் போகிறார் என நாம் தமிழர் தம்பிகள் பரப்பிவிட்டனர். ஆனால் இதற்கு சிவசங்கரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் நத்தம் சிவசங்கரன் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், எப்போதும் நான் என்உயிரிலும் மேலாக மதிக்கும் என்னுடைய நாம்தமிழர் உறவுகளுடன் மட்டுமே இருக்க விரும்புகிறேன்….. எனது வருத்தம் எல்லாம் சீமான் அண்ணன் பேசியது மட்டுமே.
காலம் அனைத்திற்குமான அருமருந்து. அண்ணன் (சீமான்) கோபத்தில் என்னை என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால் நான் அவரது கட்சியில் இருக்கும் ஒரு பொறுப்பாளர், ஆனால் எனது குடும்பத்தாரை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசும்போது நான் என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள்? உங்களுக்கு சந்தேகம் இருப்பின் அண்ணனிடமே கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்..ஐந்து மாதங்களாக பொது வெளியில் எனது மன கஷ்டங்களையும், எனக்கு ஏற்பட்ட மனக்காயங்களையும் சொல்லாமல் தான் இருக்கிறேன்…உங்களைப் போன்ற உறவுகள் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறேன்.. வேற என்ன செய்வது.. இவ்வாறு நத்தம் சிவசங்கரன் பதிவிட்டுள்ளார்.
Readmore: கழிவறையைக்கூட விடல!. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரெய்டு!. கொத்தாக சிக்கிய பணம்!.